கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து ஏமாற்றமடைந்து இன்று திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இதற்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.
இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தங்களுடைய படகுகளில் கருப்புக்கொடி கட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்
போராட்டத்தின் ஓர் பகுதியாக கச்சத்தீவு, புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கச்சத்தீவு செல்வதற்காக, இன்று ராமேஸ்வரத்திற்கு வந்த நிலையில், அங்கு படகுகள் இல்லாதமையால் பெரும் ஏமாற்றத்திற்கும் அசௌகரியத்திற்கும் முகம் கொடுத்துள்ளனர்.
பல கிலோ மீற்றர் தொலைவில் இருந்து பணம் மற்றும் நேரத்தை செலவு செய்து வந்தாலும், தங்களால் கச்சத்தீவு, அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக மத்திய, மாநில அரசாங்கங்கள் முன்கூட்டியே உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்திருக்கலாம் எனவும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இனி வரும் காலங்களுக்கேனும் அரசாங்கம் இவ்வாறான விடயங்களுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.