இலங்கையில் இருந்து இந்தியாவின் வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை தேடும் நடவடிக்கை 5 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றுடன்
கைவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததாக நம்மப்படும் நாட்டுப்படகு வேதாளை நோக்கி வந்து கொண்டிருந்த போது கடலில் மறைந்திருந்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் நாட்டு படகை மடக்கி பிடிக்க முயன்ற போது நாட்டு படகில் இருந்த மூவரில் ஒருவர் கடலில் குதித்து தப்பினர்.
மேலும் படகில் இருந்த இருவரை படகுடன் மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர்களை மண்டபம் கடலோர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில், நாட்டுப்படகு வேதாளையை சேர்ந்தது என்பதும் படகில் இருந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அத்தோடு, அவர்கள் இலங்கையில் இருந்து சுமார் 10 கிலோ தங்கத்தை கடத்தி வந்த போது அதிகாரிகளை கண்டதும் தங்க கட்டிகள் அடங்கிய பொதியை கடலில் வீசியதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் நடவடிக்கை கடந்த ஐந்து நாட்களாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது