அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அதற்கமைய, இந்த தொடரின் முதல் போட்டி கடந்த மாதம் 29ஆம் திகதி நியூசிலாந்தில் உள்ள பேசின் ரிசர்வ் (Basin Reserve) மைதானத்தில் ஆரம்பமாகியது
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி கேமரூன் க்ரீனின் அபார சதம் காரணமாக 383 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தமது முதலாவது இனிங்ஸில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்களை பதிவுசெய்தார்.
அதற்கமைய முதலாவது இனிங்ஸின் நிறைவில் அவுஸ்திரேலியா அணி 204 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்காக களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
இன்னொரு பக்கம் லபுஷேன் இரண்டு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன்படி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 12 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது.
தொடர்ந்து 03வது நாளில் பிட்ச் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக மாறியது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய நியூசிலாந்து அணி சகலதுறை ஆட்டக்காரரான கிளென் பிலிப்ஸை களமிறங்கியது .
இவரது சுழலில் சிக்கி கவாஜா 28 ஓட்டங்களுடனும் , ஹெட் 29 ஓட்டங்களுடனும், கேரி 3 ஓட்டங்களுடனும், க்ரீன் 34 ஓட்டங்களுடனும், மிட்செல் மார்ஷ் ஓட்டங்கள் எதுவும் பெறாமலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் அவுஸ்திரேலியா அணி 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சிறப்பாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்சின் துடுப்பாட்டத்தில் 71 ரன்களையும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதன்மூலம் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டியில் 71 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கிளென் பிலீப்ஸ் படைத்துள்ளார்.
மேலும், நியூசிலாந்து மண்ணில் கடந்த 2008ஆம் ஆண்டிற்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் கிளென் பிலீப்ஸ் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில், டாம் லாதம் 08 ஓட்டங்களையும் வில் யங் 15 ஓட்டங்களையும் , வில்லியம்சன் 09 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தார்.
எனினும் ரச்சின் ரவீந்திரா, டேர்ல் மிட்செல் கூட்டணி 67 ஓட்டங்கள் எடுத்தது.
59 ஓட்டங்கள் எடுத்திருந்த ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்ததை தொடர்ந்து களமிறங்கிய டாம் பிளெண்டல் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் , க்ளென் பிலிப்ஸ் ஒரு ஓட்டத்துடனும் நாதன் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் மிட்செல் வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கையில் மறுபுறம் விக்கட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
இறுதியாக டேர்ல் மிட்செல் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அவுஸ்திரேலியா அணி 172 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.