இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
தற்போது சாந்தனின் பூதவுடல் டிப்போ சந்தியில் அமைத்துள்ள அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மூத்த போராளியான காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார்.
பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்தும் தேசிய உணர்வுக் கொடி போர்த்தியும் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதேவேளை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையால் அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தி நுழைந்தவுடன், ஊர்தி தரித்து நின்ற இடத்தில் வாகனத்தை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளதாகவும் , மீறி நிறுத்தும் பட்சத்தில் ஊர்தியின் சாரதி கைதுசெய்யப்படுவார் எனவும் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலைமை உருவாகியதாகவும் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.