சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே அரசாங்கத்தின் விருப்பம் என தெரிவித்த ஜனாதிபதி ரணில், IMF யின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை ”சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகைத் தீர்ப்பு தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், அதற்கான விரிவான கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.