நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தரன் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், இந்த நாடு தற்போதும் பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து அந்நியப்பட்டிருக்கின்றது. எனவே இந்த நாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.
சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம் சிவபெருமான் இந்துக்களின் முதல் முதல் கடவுள் இந்த நிலையில் சிவராத்திரிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஆலைய குரு மற்றும் பக்தர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியிலே எங்கள் பிரதேசங்கள் பல கபளீகரம் செய்ப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் வெடுக்குநாறி மலையும் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும், வடக்கு கிழக்கில் அமைதியை கொண்டு வரவேண்டும், 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்தவேண்டும், புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற தமிழ் தனவந்தவர்கள் இலங்கையில் வந்து முதலிடவேண்டும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் வாய்கிழிய கூறிக் கொண்டு, மறைமுக நிகழ்ச்சி நிரலில் வடக்கு கிழக்கில் தமிழினத்தின் கலை கலாச்சாரத்தை ஒழிக்கும் ஒரு வேலைத்திட்டமாக இந்த வெடுக்குநாறி சம்பவத்தை பார்ப்பதாகவும் கோவிந்தன் கருணாகரம் மேலும் குறிப்பிட்டார்.