”எமக்கான நீதியினை அடைவதற்கு வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப்போராட்டமே ஒரே வழி” என்று சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் அறைகூவல் விடுத்துள்ளார்.
வெடுக்குநாறிமலை வழக்கை பார்வையிடுவதற்காக நேற்று வவுனியா வருகைதந்த அவர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது, இலங்கை பொலிசாரின் அடாவடி அளவு கடந்து செல்வதாகவும், கைது செய்யப்படுவதற்கான எந்தவிதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் பொய்யான வகையில் தொல்பொருட் திணைக்களத்தால் நீதிமன்றிற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்படவர்கள் சீரான உணவின்றி வேதனைகளை அனுபவித்து வருவதாகவும், இந்த சூழ்நிலையில் நாம் ஒரு மக்கள் எழுச்சிப் போராட்டத்தினை வடக்கு கிழக்கு தழுவிய வகையிலே விரைவில் ஒன்றுதிரண்டு ஏற்படுத்துவதனூடகவே எமக்கான நீதியை நிலைநாட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வடக்கு கிழக்கின் அனைத்து உறவுகள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு பேரெழுச்சிப்போராட்டம் ஒன்று வவுனியா நகரில் விரைவில் நடாத்தப்படும் எனவும், அதற்கு அனைவரது ஆதரவினையும் வேண்டி நிற்பதாகவும், வேலன் சுவாமிகள் மேலும் தெரிவித்துள்ளார்.