சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, சமர்ப்பித்த நம்பிகையில்லாத் தீர்மானம் மீது கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை உள்வாங்காமல் இணைய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியமை, மற்றும் பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் அரசியல் பேரவையில் சபாநாயகர் செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மீதான விவாதம், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்று மூன்றாவது நாள் விவாதமும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, குறித்த தீர்மானமானது 42 வாக்குகளால் சபையில் தோற்கடிக்கப்பட்டது.