நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட இரண்டு முதலீட்டு வலயங்களுக்கு கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பியினரால் அச்சுறுத்தல் காணப்பட்டிருந்தாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற முதலீட்டுச் சபையின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள 30 நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கிவைத்திருந்தார்.
அத்துடன் முதலீட்டுச் சபையின் கீழ் நீண்டகாலமாக செயற்பட்டு வரும் நிறுவனங்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டன.
மேலும், இலங்கைப் பொருளாதாரத்திற்கு வழங்கிய விசேட பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, விருதுகளும் வழங்கப்பட்டன.
1981 ஆம் ஆண்டு பியகம முதலீட்டு வலயம் திறந்துவைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசாக இதன்போது வழங்கி வைத்திருந்தார்.