சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணிக்கும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 287 ஓட்டங்களை பெற்று வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்தது.
இது ஐபிஎல் வரலாற்றில் அணி ஒன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 287 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்திருந்தது.
ஹைதராபாத் அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் அதிகபட்சமாக 41 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அத்துடன் ஹென்ரிச் கிளாஸன் 67 ஓட்டங்களையும், ஹெய்டன் மெக்ரம் மற்றும் அப்துல் சமட் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 32 மற்றும் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதன்படி, 288 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
பெங்களூர் அணிசார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக் 83 ஓட்டங்களையும் அணியின் தலைவர் டு பிளஸிஸ் 62 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சி்ல பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும் மானக் மார்கட்டே 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற இவ்வருட ஐபிஎல் தொடரின் 8 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹைதராபாத் அணி 277 ஓட்டங்களை பெற்றதே அதிகபட்ச ஓட்டங்களாக காணப்பட்டது. இந்நிலையில் தனது சொந்த சாதனையை முறியடித்து ஹைதராபாத் அணி மீண்டும் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.