இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுமானால் 2025ஆம் ஆண்டின் புதிய பாரத பிரதமராக அமித்ஷா பதவியேற்பார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் புது டில்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 5ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் உரையாற்றும் போது அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றிவாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 20 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்,
“அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் திகதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிடும்.
அதன் பின்னர் இந்திய பிரதமராக அமித் ஷாவிற்கு வழி விடுவதற்கு மோடி முடிவெடுத்துள்ளார். 75 வயதுடன் ஓய்வு பெறப்போவதாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இதுவரை அறிவிக்கவில்லை.
இந்தத் தேர்தலில் அமித் ஷாவுக்காகவே நரேந்திர மோடி வாக்கு சேகரிக்கிறார்.
உத்தர பிரதேச மாநில முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில்
அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பை மாற்றி எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை
இரத்து செய்ய பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 220 க்கும் குறைவான இடங்களே கிடைக்கும்.
ஹரியானா, தில்லி, பஞ்சாப், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு குறையும்.
அதனால் பாரதிய ஜனதா கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது” என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.