நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பதாக 13வது அரசியலமைப்பு திருத்ததை அமுல்ப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதோடு சர்ச்சைக்குரிய காணிப் பிரச்சினையை உத்தேச காணி ஆணைக்குழுவின் ஊடாக தாமதமின்றி தீர்வினை காணுமாறும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நாட்டில் நிலவும் இன மற்றும் மத அவநம்பிக்கையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக வடக்கில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடல்களை தாமதமின்றி முன்னெடுக்குமாறும் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பதாகவே அனைத்து மக்களுக்கு இடையிலும் ஒற்றுமையை ஏற்படுத்தி அனைவரையும் ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயம் என்றும் கரு ஜயசூரிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.