முல்லைத்தீவு தியோநகர் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிராதான வீதியினையும் கடற்கரையினையும், இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த பகுதி மக்களினால் வேலித் தடைகளை அகற்றப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று மீனவர்களுக்கு தொடர்ச்சியாக இடையூறுகளை விளைத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே இதற்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மக்கள் தெரிவித்து நேற்று முன்தினம் இரவு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் பிரதேச செயலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது குறித்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு பெற்றுத்தரப்படும் என வாக்குறுதி அளக்கப்பட்ட நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
தீர்வு கிடைக்காவிட்டால் இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.