ஐ.நா-வின் ஆன்மா காசாவில் மாண்டுவிட்டதாகவும், தனது சொந்த ஊழியர்களை கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை எனவும் துருக்கி நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் விமர்சித்துள்ளார்.
தெற்கு காசாவிலுள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையிலேயே, துருக்கி நாட்டின் ஜனாதிபதி தையிப் எர்டோகன் (Tayyip Erdoğan), ஐ.நா அமைப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்துள்ள துருக்கி ஜனாதிபதி,
“ஐ.நா-வின் ஆன்மா காசாவில் மாண்டுவிட்டது. தனது சொந்த ஊழியர்களை கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை. இன்னும் என்ன நடக்க வேண்டுமென காத்துக் கொண்டு உள்ளீர்கள். இஸ்லாமிய உலகத்துக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொதுவான முடிவை எடுக்க ஏன் தாமதம்? இஸ்ரேல், காசாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காசா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், காஸா – எகிப்து எல்லை முழுவதையும் இஸ்ரேல் இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அத்துடன், எகிப்திய சினாய்க்கு செல்லும் 20 சுரங்கப்பாதைகளை இதுவரை கண்டுபிடித்துள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது.