மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் மீன்பிடி படகொன்று கடலில் தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய பிலிப்பைன்ஸ் செபு மாகாணத்தில் நாகா நகர் தீவுப்பகுதியில் நேற்றிரவு(05) மீன்பிடி படகொன்று திடீரென தீ பிடித்து எரிந்ததாக கடலோர பாதுகாப்புபடை அதிகாரிகள் இன்று (06) தெரிவித்துள்ளனர்.
மூங்கிலாலான குறித்த படகில், முன்னதாக இயந்திர கோளாறு ஏற்பட்டதையடுத்து, தீ படகை சூழ்ந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மீன்பிடித் தொழிலாளர்கள் சிலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் தீ விபத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் படகிலிருந்து கடலில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது.
விபத்தின்போது, அவ் வழியாகச் சென்ற இழுவைப் படகொன்று தீயை அணைக்க உதவிசெய்துள்ளதுடன், தீ விபத்து குறித்து கடலோர காவல்படையினருக்கு அறிவித்துள்ளது.
தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட கடலோரக் காவல்படை மற்றும் மீட்புப் படையினர் தண்ணீரில் குதித்தவர்களையும், படகில் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந் நாட்டு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ், சுமார் 7,600 தீவுகள் கொண்டு தீவுத்தொகுப்புகளை கொண்ட நாடாகும்.
அங்கு தீவுகளுக்கு இடையே நடைபெறும் படகு போக்குவரத்தில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.