நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் இராகவன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் இராகவன் ”நாடாளுமன்றில் உரையாற்றிய வேளை “போராட்டக்காரர்களுக்கு உரிய தீர்வினை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெளிநாட்டில் உள்ளார் எனவும், அவர் வந்ததும் தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும்” தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்து விடயப் பொருத்தப்பாடு இல்லாத ஒன்று என்றும், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கும், பல்கலைக்கழகமொன்றின் துணைவேந்தர் வெளிநாடு சென்றமைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத் தொழிற் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ”போராட்டம் பற்றியோ அதன் தார்ப்பரியங்கள் பற்றியோ அடிப்படை விடயத்தைக் கூடத் தெரியாதவர் போல நடந்து கொள்ளும் கல்வி இராஜாங்க அமைச்சரிடமிருந்து நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை தமக்குத் துளி கூட இல்லை” என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.