கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மகாவலி வளவ வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 45,253 பேரில் 1,524 பேருக்கு, எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் இன்று காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உறுமய திட்டத்தின் காணிகளை வழங்க வேண்டியவர்களுக்கு அடுத்த இரு மாதங்களில் காணிகளை பெற்றுக்கொடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளேன்.
நாட்டில் 75 வருடங்களாக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. தற்போது சட்டபூர்வமாகவே அந்த உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வகையான புரட்சியாகும்.
விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கியது போலவே கொழும்பு மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்களின் வீட்டு உரிமைகள் வழங்கப்படும். அதனால் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு வீட்டு உரிமை கிடைக்கும்.
விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த உறுமய வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.