ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாதமையால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியக் குடியரசு மேற்காசியாவில் அமையப்பெற்றுள்ள ஈரான் நாட்டில் கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் இறுதி வேட்பாளர்களாக பட்டியலிடப்பட்ட, முகமது பாகர் கலிபாப், சயீத் ஜலிலி, மசூத் பெஜெஷ்கியான் மற்றும் முஸ்தபா போர்முகமதி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதனையடுத்து வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்ததன் பின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மசூத் பெஜெஷ்கியான் 1.4 கோடி வாக்குகளை பெற்றதுடன் சயீத் ஜலிலி 90.4 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
முகமது பாகர் கலிபாப் 30.3 லட்சம் வாக்குகளையும், முஸ்தபா போர்முகமதி 2.06 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
எனினும், இந்த தேர்தல் முடிவுகளுக்கமைய மசூத் பெஜெஷ்கியான் அதிகபட்ச வாக்குகளை பெற்றிருந்தாலும், ஈரான் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.
ஆனால் அவ்வாறு பெறாவிட்டால் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடாத்தப்படும் எனவும் அதற்கமைய, தற்போது அதிகபட்ச வாக்குகளைப் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் மசூத் பெசெஸ்கியன் மற்றும் சயீது ஜலீலி ஆகிய இருவருக்கும் இடையே அடுத்த வாரம் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரான் வரலாற்றில் இதற்கு முன்னர் கடந்த 2005 ஆம் ஆண்டில் மாத்திரமே இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.