அசாமில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நேற்று (06) மாத்திரம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அசாமில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளமையை அசாம் பேரிடர் மேலாண் கழகம் உறுதிப்படுத்துகின்றது.
அசாமில் கடந்த மாதத்திலிருந்து தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகின்றது.
அசாமில் ஒட்டுமொத்த அளவில் வெள்ள நிலைமை ஓரளவு மேம்பட்டபோதும், 29 மாவட்டங்களைச் சேர்ந்த 23.96 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தூப்ரி மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 7,97,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கச்சார் மாவட்டத்தில் 1,75,231 பேரும், தர்ராங் மாவட்டத்தில் 1,63,218 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், 107 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 3,535 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், 68 ஆயிரத்து 768.5 ஹெக்டேர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 15 இலட்சத்து 49 ஆயிரத்து 161 விலங்குகள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கவுகாத்தியின் ஜோதி நகர் பகுதிக்கு நேற்று நேரில் சென்றார்.
வெள்ள நிலையை எதிர்கொள்ள வேண்டிய மற்றும் தீர்வு காண வேண்டிய விசயங்களை குறித்து அவர் நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.