ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் மச்சேதி பகுதியில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கத்துவா நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் பத்னோட்டா கிராமத்தில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலில் கையெறி குண்டு வீசிய பயங்கரவாதிகள் பின் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்திய போதிலும், பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டின் வழியே தப்பிச் சென்றுள்ளனர். மேலும், சில பகுதிகளில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.