புத்தரின் போதனைகளுக்கும் அறிவியல் உலகத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய ஒரு புதிய நிறுவனம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இலங்கை அமரபுர மகா நிகாயவின் அமரபுர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அமரபுர நிகாய நவீன இலங்கையின் வரலாற்றின் ஒரு பகுதியாகும். இந்த அரமரபுர மகா நிகாய நமது மஹகராவே ஸ்ரீ ஞானவிமலதிஸ்ஸ தேரரின் முயற்சியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். இன்று உலகம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மாறிவிட்டது. குறிப்பாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும்போது நாமும் அதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த 05-10 ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் மனதிற்கும் இடையிலான தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பௌத்த மதத்துக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்குமாறு தொழில்நுட்ப அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
மகா சங்கத்தினருடனும், பொது மக்களுடனும் கலந்துரையாடி இப்பணிகளைத் தொடர எதிர்பார்க்கின்றோம்.
இன்று நாம் ஒரு சமூகமாக முன்னேற வேண்டும். அதன்போது நாம் பின்வாங்க முடியாது. அனுராதபுர சகாப்தம் நமது நாட்டின் புகழ்பெற்ற சகாப்தமாக கருதப்படுகிறது.
அநுராதபுர காலத்தில், மகாவிகாரை, ஜேதவனாராம மற்றும் அபயகிரிய போன்ற முக்கிய விகாரைகள் தோன்றின.
அப்போது, பொது மக்கள், பௌத்த துறவிகள் உட்பட அனைவரும் இந்தப் பிரிவெனாக்களில் கல்வி கற்றனர்.
மஹாசேய, ஜேதவானாராம, அபயகிரிய போன்ற பாரிய அற்புதங்களை நிர்மாணிக்கும் அறிவை எமது மக்கள் பிரிவெனா கல்வியின் மூலம் பெற்றனர் என்பதைக் கூற வேண்டும்.
மேலும், தற்போதைய பொறியாளர்களையும் ஆச்சரியப்படுத்தும் நமது சிறந்த நீர்ப்பாசன கலாசாரமும், சீகிரியா போன்ற சிறந்த படைப்புகளும் பிரிவெனா கல்வி முறையால் உருவானது. நவீன அறிவையும் இந்த சிறப்புகளையும் இணைத்துக்கொண்டு ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டும்.
யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அநுராதபுரம் முழுவதிலும் உள்ள அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்பாக அவரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கிறேன்.
அனுராதபுரம் மகா விகாரையின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றோம். பௌத்தத்திற்கும் நாம் வாழும் நவீன தொழில்நுட்ப உலகிற்கும் இடையே ஒரு பெரிய தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை புரிந்து கொண்டு முன்னேற வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.