ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்கள் தாயகம் திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர ரஷ்யா ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால், ரஷ்ய இராணுவத்தில், இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட விவகாரம் குறத்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிர் புட்டினிடம் வினவியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, நேற்று ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மொஸ்கோ விமான நிலையத்தை சென்றதையடுத்து, அவரை ரஷ்யாவின் முதன்மை துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றிருந்தார்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய கொடியுடன் இந்திய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
மொஸ்கோவில் இன்று (09) நடைபெறும், இந்தியா – ரஷ்யா இடையிலான 22ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் அவர் ரஷ்யாவுக்கு விஜயசெய்துள்ளமை இதுவே முதல் என குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியும், புட்டினும் சந்திக்கவுள்ளனர்.
முதலில், இருவரும் தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பின்னர் பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி அவர்கள் விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், இராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், மக்களிடையிலான உறவு ஆகியவற்றில் இருதரப்பு உறவு குறித்து இருவரும் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, ரஷ்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திக்கவுள்ளார்.