கடந்த கால தவறுகளில் இருந்து இன்னமும் பாகிஸ்தான் பாடங்கள் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என இந்திய பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.
கார்கில் போரில் வெற்றி பெற்று இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்றிருந்த
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரில் உயிர் நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன் இந்தியாவில் ஏற்படுகின்ற பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான முழுத் தகுதியுடன் இராணுவ வீரர்கள் உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இந்திய பிரதமர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு, நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா மீதான தாக்குதல்கள் இன்றும் தொடர்வதாகவும், கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை என்றும் நரேந்திரமோடி குற்றம் சுமத்தியிருந்தார்.
இதேவேளை, கார்கில் போரில் தியாகம் செய்த ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் தலை வணங்குவதாக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கார்கில் போரில் கிடைத்துள்ள வெற்றி என்பது, இந்திய வீரர்களின் துணிச்சலிலும் அசாதாரண வீரத்திலும் தங்கியுள்ளதாகவும்,
எனவே முழுதேசம் அவர்களுக்கு நன்றியுடன் அஞ்சலி செலுத்தும் ஒரு சந்தர்ப்பம் இதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நுழைந்ததையடுத்து, இடம்பெற்ற போரில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை தனதாக்கியிருந்தது.
இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.