பிரித்தானியாவின் சவுத்போர்ட் நகர கத்திக்குத்து தாக்குதலில் (Southport stabbing attack) 2 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், அங்கிருந்த சிறுவர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.
பிரித்தானியாவின் கடலோர பகுதியில் அமைந்துள்ள சவுத்போர்ட் நகர ஹார்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில், சிறுவர்களுக்கான நடன பயிற்சிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் டெய்லர் ஸ்விஃப்ட்-கருப்பொருள் நடன நிகழ்வின் போது (Taylor Swift-themed dance event) கல்லூரிக்குள் புகுந்த சிறுவனால் இந்த தாக்குதல் நடத்த்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக, வேல்ஸின் கார்டிஃப் நகரில் பிறந்து லங்காஷையரில் உள்ள பேங்க்ஸ் கிராமத்தில் வசிக்கும் 17-வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலாக இதை கருதவில்லை என முதல்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர்கள் பலியான சம்பவத்திற்கு பிரித்தானிய மன்னரும், ராணியும், பிரதமரும் ஆழ்ந்த இரங்கலையும், அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர்.