பிரேசில், sao paulo மாநிலத்தில், Vinhedono நகரில் சென்றுகொண்டிருந்த, Voepass விமானமான 2283 என்ற விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்து வெடித்துள்ளது.
திடீரென நடுவானில் நிலை தடுமாறிய விமானம், பிரேசில் – வின்ஹெடோ நகரிலுள்ள வீடுகளின் மீது தலைகீழாக கவிழ்ந்து விழுந்துள்ளது.
விழுந்த சில நொடிகளிலேயே விமானத்தின் பெரும் பகுதியொன்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. பின்னர் அதிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் படி, 62 பேர் பயணித்த அந்த விமானம் செங்குத்தாக கீழே விழுந்து வெடித்துச் சிதறியமையால் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
58 பயணிகள், 4 பணியாளர்களுடன் இந்த விமானம் சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான குருல்ஹாஸை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆனால், விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரையில் எந்தத் தகவலும் வெளிவரவில்லை. இவ் விபத்து குறித்து பிரேசிலின் ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.