சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள அகிலஇலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் அடுத்த வாரம் முதல் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்
இதன்படி நாளை மறுதினம் தொடக்கம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க குறிப்பிட்டார்
எவ்வாறாயினும் பணிப்புறக்கணிப்பு காரணமாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவித்துள்ளனர்
மேலும் , நாம் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்தி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நாம் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.
எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் சேவையில் இருந்து விலகி செயற்படவுள்ளோம். கறுப்பு உடையணிந்தே கடமைகளுக்கு சமூகமளிப்போம்.
நாம் ஏற்கனவே சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளோம். இந்த நிலையிலேயே எதிர்வரும் வாரத்தை கறுப்பு வாரமாக பிரகடனப்படுத்தி நாம் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.
இதேவேளை, இந்த விடயம்தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவித்துள்ளதோடு, தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள போதிலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கு எந்தவித இடையூறுகளையும் ஏற்படுத்தாதவாறு கடமைகளை முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை எழுத்துபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர் , அரச சேவைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் கிராம சேவையாளர் அலுவலகங்களில் கறுப்பு கொடி ஏற்றப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.