ஜனாதிபதித் தேர்தலில் வெல்லக்கூடிய வேட்பாளர்கள் தமிழ்த்தரப்புடன் பேரம் பேசுவதற்கான காலம் தற்போது உருவாகி உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினா் கோவிந்தன் கருணாகரன் குறிப்பிட்டுள்ளாா்.
அவற்றின் அடிப்படையிலேயே தற்போது தமிழ் வேட்பாளர் தேவை என்கின்ற நிலைமை உருவாகியுள்ளதாக அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொிவித்துள்ளாா்.
அத்துடன், கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் மற்றும் ஜனாதிபதிகள் தமிழ் மக்களுக்கு உரிய பிரச்சினைகளை தீர்க்காத காரணத்தினால் இன்று இவ்வாறான ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
ஜனாதிபதி தேர்தலில் வெல்லக்கூடிய வேட்பாளர்கள் எங்களுடன் பேசுவதற்கான காலம் உருவாகி உள்ளதாக உணர்வதாகவும், எமது கோரிக்கைகளை ஏற்று அவர்கள் ஒரு நியாயமான தீர்வை வைத்தால் அவை குறித்த நிலைப்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் கோவிந்தன் கருணாகரன் தொிவித்தாா்.
எனவே நியாயமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறாமல் விட்டால் தமிழ் பொது வேட்பாளரின் பெறுமதி என்பது சரியானது என நியாயப்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும் என்பது தன்னுடைய கருத்தாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் கோவிந்தன் கருணாகரன் மேலும் குறிப்பிட்டாா்.