ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் குறித்த சந்திப்புக்கான நேர ஒதுக்கீடு தொடா்பாக தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சந்திப்பில், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சுமந்திரன் எம்.பிக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பொன்றிலும் சுமந்திரன் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.