ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால், அடுத்து 48 மணி நேரத்திற்கு அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் தலைவர் ஈரானில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம் சாட்டப்படும் நிலையில், ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நள்ளிரவு முதல் ஹில்புல்லா படையினர், 70 ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் போர் ராணுவ அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் அடுத்து 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசரநிலையை அறிவிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் நாட்டில் இஸ்ரேலை ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விட வேண்டும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதன் மூலம் காசாவில் நடத்தியதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி விட்டதாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.