கோவை மாநகரில் மதுபோதையோடு வாகனம் செலுத்துவோரால் அதிகரித்துள்ள விபத்தை தடுக்க பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு சாரதிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சொந்த வாகனங்களில் மது அருந்த வருவோர் திரும்பி செல்லவதற்கு வசதியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுபான கூடங்களுக்கு கோவை மாநகர பொலிஸார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 126 மோட்டார் வாகன சாரதிகள், கார்களில் வந்த 18 உள்பட 52 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக , மதுபானசாலைகளுக்கு சொந்தமாக வாகனம் ஓட்டி வருபவர்கள் திரும்ப செல்லும் போது மது அருந்தி இருந்தால் அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுபானசாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, மது அருந்திய ஒருவர், ஓட்டுநர் இல்லாத சூழலில், அவர் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும்.
அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவரை தொடர்புடைய மதுபானசாலை சார்பில் ஏற்பாடு செய்து மது அருந்தியவரின் சொந்த வாகனத்திலேயே அவரை வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும்.
மதுபானசாலைகளில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்த வேண்டும். மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய பார் மதுபானசாலை நிர்வாகம் தவறி, அதன் மூலம் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தொடர்புடைய மதுபானசாலை மீது சட்டப்படி நடவடிக்கையுடன் உரிமமும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டி முதல்முறை பிடிபட்டால் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அலலது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
அதே தவறை 2-வது முறையாக செய்வோர் மீது ரூ.15 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.
இதில் தொடர்புடையவர்களின் வாகனம் முடக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் எனவும் கோவை பொலிஸார் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.