கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காகக் கனடாவில் தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார்.
தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகமானோர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் மற்ற சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது.
இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறிக்க கனடா அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.