ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.
நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம் நாளான இன்று காலை 6.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியதை தொடர்ந்து பக்தர்களின் விண்ணைமுட்டும் அரோகரா கோக்ஷம் முழங்க தேர் திருவிழாவில் சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் ஏறிவந்த நல்லையம்பதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்திருந்தார்
தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு நல்லுார் கந்தனின் அருளாசியைப்பெற்றிருந்தனர்.
இதேவேளை, ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி நல்லூர் கந்த பெருமானை பக்தி மயத்துடன் வழிபட்டிருந்தனர்.
நல்லுார் கந்தனின் தேர் இன்று 60 வருடத்தை புர்த்தி செய்து மணிவிழா காண்பது இன்றைய திருவிழாவின் விஷேட அம்சமாகும். இலங்கை , இந்திய கலைஞர்களின் வடிவமைப்பில் 1964 ஆம் ஆண்டு இந்த தேர் முதன்முதலில் நல்லுாரான் திருவழாவில் இழுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் “ஆடி அமாவாசை” தினத்திலிருந்து ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி “ஆவணி அமாவாசை”தினத்தன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா ஆரம்பமாகியிருந்த நிலையில் , 25 ஆம் திருவிழாவான நாளை திங்கட்கிழமை காலை 6.15 மணிக்குத் தீர்த்த உற்சவம் இடம்பெறும். மாலை 4.30 மணிக்குக் கொடியிறக்கத்துடன் பெருந்திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.