நாட்டை மீட்பது எவ்வாறு? என்ற தலைப்பில் மார்ச் 12 என்ற இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் முதலாம் நாளான இன்றைய தினம் 6 வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் மாத்திரம் இதற்காகத் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த விவாதத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அதில் பங்கேற்ற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
அத்துடன் அனுரகுமார திஸாநாயக்க நேற்று பிற்பகல் வரை இந்த விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவில்லையெனப் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை இரண்டு மணித்தியாலங்களுக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 6 கேள்விகள் முன்வைக்கப்படும் எனப் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.