நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 63 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கையுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
செப்டெம்பர் 18 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 305 ஓட்டங்களை பெற்றது.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 340 ஓட்டங்களை பெற்றது.
இதனால், 35 ஓட்ட பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 309 ஓட்டங்களை பெற்றது.
அதன்படி, வெற்றி இலக்காக நியூஸிலாந்துக்கு 275 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட, அதனை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியால் இரண்டாவது இன்னிங்ஸில் 211 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
இலங்கை சார்பில் பந்து வீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது போட்டி காலியில் செப்டெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.