போலிவுட் நடிகரும் அரசியல்வாதியுமான கோவிந்தா செவ்வாய்க்கிழமை (01) காலை தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
நடிகர் கோவிந்தா கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 6 மணிக்கு மும்பையிலிருந்து கொல்கத்தா புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு செல்வதற்கு முன்பாக தான் வைத்திருக்கும் உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்திருக்கிறார். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக கைத்தவறி அந்த துப்பாக்கி கீழே விழுந்து வெடித்து கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது காலில் இருந்த குண்டை வைத்தியர்கள் அகற்றினர். அதன்பின்னர், தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
சிகிச்சையின் பின்னர் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர்,
வைத்தியர்கள் தோட்டாவை அகற்றியதாகவும், தனது ரசிகர்களின் பாசத்துடனும் கடவுளின் ஆசீர்வாதத்துடனும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நடிகரின் உடல்நிலை குறித்து கோவிந்தாவின் மருத்துவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் கோவிந்தா இந்தியில் 165 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.