ஐப்பசி சோமவாரத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று தரிசிப்பது மிகவும் விசேடமானது.
இந்தநாளில், மாலையில் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்துப் பிரார்த்தித்துக் கொண்டால், நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்.
சிவ வழிபாடு என்பது, இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நன்மைகளைத் தரவல்லது.
இம்மை என்றால் இந்தப் பிறவியைக் குறிக்கும். இந்த வாழ்க்கையைக் குறிக்கும். மறுமை என்றால் இறப்பிற்குப் பின் உள்ள உலகைக் குறிக்கும். பித்ரு லோகத்தைக் குறிக்கும்.
சிவனாரை வழிபட வழிபட, லோகாயத வாழ்வில், இல்லறத்துக்குத் தேவையானவற்றை நமக்கு வழங்கி அருளுவார் ஈசன். அதேபோல், ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறார் தென்னாடுடைய சிவனார்.
சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை உகந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள்.
அதிலும், ஐப்பசி மாதத்தில் வருகிற திங்கட்கிழமைகள் இன்னும் விசேஷமானவை.
எனவே, இன்று மாலையில் சிவ தரிசனம் செய்யுங்கள்.
நம் சிந்தையில் தெளிவையும் செயலில் நேர்த்தியையும் புத்தியில் சுறுசுறுப்பையும் வாழ்வில் இனிமையையும் தந்து அருள்பாலிப்பார் தென்னாடுடைய சிவனார்.