கண்டி – அணிவத்தை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான சொகுசு கார் மற்றும் ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இந்த 02 வாகனங்களும் நேற்று (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்கள் தொடர்பான சட்ட ஆவணங்களை குடியிருப்பாளர்களால் முன்வைக்க முடியாத காரணத்தினால், அவை பொலிஸ் காவலில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த சொகுசு காரும் ஜீப் வண்டியும் கண்டி – மஹையாவ பிரதேசத்தில் கார் விற்பனை நிலையத்தை நடத்தும் ஒருவருக்கு சொந்தமானது என தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த காலங்களில் துறைமுக அதிகார சபையில் உயர் பதவியை வகித்துள்ளதுடன், அரசியல்வாதி ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.