அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் இருவரும் முக்கிய போர்க்களப் பகுதிகளில் வாக்குகளைப் பெற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தனது வாக்காளர்கள் தொடர்பான ஜோ பைடனின் கருத்துக்களை விமர்சிக்கும் வகையில் ஒரு வினோதமான செயலை மேற்கொண்டார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சார பேரணியின் ஒரு பகுதியாக விஸ்கொன்சினில் சுத்திகரிப்பு பணியாளர்களின் உடை அணிந்து, தனது பெயரைக் கொண்ட குப்பை அள்ளும் லொறியில் சவாரி செய்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களை “குப்பை” என்று அழைத்த ஒரு நாளுக்கு பின்னர், குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்த சவாரியின் போது தனது ஆதரவாளர்களுடன் பேசிய ட்ரம்ப், எனது குப்பை வண்டி உங்களுக்கு எப்படி பிடிக்கும்? இந்த டிரக் கமலா மற்றும் ஜோ பைடனுக்கான மரியாதை, 250 மில்லியன் மக்கள் குப்பைகள் அல்ல என்றார்.
அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகை 345 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த கருத்தின் மூலம் அவருக்கு அதில் 250 மில்லியன் மக்கள் ஆதரவாக உள்ளதாக கூறியுள்ளார்.