துன்ஹிந்த – பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது, கொத்தலாவல பாதுகாப்புக் பல்கலைக்கழகத்தின் 39வது பாடநெறியைச் சேர்ந்த 36 மாணவர்கள், 03 விரிவுரையாளர்கள், குழுவுக்குப் பொறுப்பான ஆலோசகர், பேருந்தில் பயணித்த சிரேஷ்ட இராணுவ உறுப்பினர் மற்றும் சாரதி உட்பட 42 பேர் பேருந்தில் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த இரு மாணவிகளும் குருநாகல் மற்றும் நிவித்திகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இரு மாணவிகளின் இறுதிக் கிரியைகளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையில் மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தில் மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 07 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய, நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
அதற்காக இலங்கை விமானப்படையின் பெல் 412 ரக உலங்கு வானூர்தி ஒன்று தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய, பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் வளைவு ஒன்றிற்கு அருகில் பேருந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.