பிரிக்ஸ் (BRICS ) உறுப்புரிமைக்கான இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக சில உள்ளூர் ஊடகங்களில் வெளியான தவறான செய்திகள் குறித்து வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
2024 ஒக்டோபர் 7 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டபடி, இலங்கை BRICS மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் (NDB) அங்கத்துவத்திற்கு விண்ணப்பித்தது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் உள்ள தனது சகாக்களுக்கு கடிதம் மூலம் இலங்கையில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2024 ஒக்டோபர் 22-24 ஆம் திகதிகளில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், வெளியுறவுச் செயலர் அருணி விஜேவர்தன, இலங்கைத் தூதுக்குழுவின் தலைவராக இதற்கான இலங்கையின் ஆர்வத்தை வெளியிட்டார்.
அதே சமயம் BRICS இல் உலகளாவிய தெற்கின் நாடுகளின் கணிசமான ஆர்வத்தை வெளியிட்டது.
இலங்கை உட்பட பல நாடுகளின் BRICS உறுப்புரிமைக்கான நிலுவையிலுள்ள கோரிக்கைகள் BRICS உறுப்பு நாடுகளால் உரிய காலத்தில் பரிசீலிக்கப்படும்.
புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான இலங்கையின் நோக்கத்தை NDB இன் தலைவர் வரவேற்றார்.
வெளிவிவகார அமைச்சு சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து இது தொடர்பான நடைமுறைகளை மதிப்பாய்வு செய்யும்.
இலங்கையின் BRICS விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று சில உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில் எந்த உண்மையும் இல்லை.
2024 நவம்பர் 6 அன்று அமைச்சரவைக்கு பிந்தைய ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டமை வருத்தமளிக்கிறது – என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.