சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐசிசி), 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான முக்கிய நிகழ்வை இரத்து செய்துள்ளது.
நவம்பர் 11 ஆம் திகதி லாகூரில் நடைபெறவிருந்த 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான முறையான அட்டவணை அறிவிப்பு தொடர்பான நிகழ்வினையே ஐசிசி இரத்து செய்துள்ளது.
போட்டி அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், பங்கேற்கும் அனைத்து நாடுகளுடனும் கலந்துரையாடிய பின்னர் அது தீர்மானிக்கப்படும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐசிசியுடன் தொடர்பு கொண்டு, அவர்கள் போட்டிக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டார்கள் என்பதை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு ஹைப்ரிட் (கலப்பு) வடிவிலான போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ள தீர்மானித்தாக செய்திகள் வெளியாகின.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா தனது போட்டிகளை விளையாடும் என்றும் சொல்லப்பட்டது.
எவ்வாறெனினும் ஹைபிரிட் முறை குறித்து எந்த விவாதமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.