பேர்த்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியானது எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மொஹமட் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அவுஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
மெல்பர்னில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றிருந்தது, அதன் பின்னர் அடிலெய்டில் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் ஒன்பது விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் மூன்றாவதும், இறுதியுமான போட்டி ஞாயிற்றுக்கிழமை (10) பேர்த்தில் நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பந்து வீச்சில் பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
பின்னர், 141 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை கடந்தது.
பாகிஸ்தான் சார்பில் அதிகபடியாக சைம் அயூப் 42 ஓட்டங்களையும், அப்துல்லா ஷபீக் 37 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் ஹாரிஸ் ரவுஃப் தெரிவானார்.
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பிரிஸ்பேர்னில் ஆரம்பமாகும்.