ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது.
ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா வந்திருந்த ஈரான் மகளிர் அணியினர், கடந்த மார்ச் 2-ஆம் திகதி நடைபெற்ற போட்டியின் போது ஈரான் தேசிய கீதத்தைப் பாடாமல் மௌனம் காத்தனர்.
ஈரானில் போர் தொடங்கியிருந்த சூழலில், அவர்களின் இந்தச் செயல் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகவோ அல்லது போரில் உயிரிழந்தவர்களுக்கான துக்கமாகவோ பார்க்கப்பட்டது.
இதனால், ஈரான் திரும்பினால் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்ற அச்சத்தில் அவர்கள் ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் கோரினர்.
ஆரம்பத்தில் ஐந்து வீராங்கனைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்கப்பட்டது.
பின்னர் மேலும் ஒரு வீராங்கனை மற்றும் ஒரு பணியாளர் என மொத்தம் ஏழு பேர் தஞ்சம் கோரினர். ஆனால், புதன்கிழமை அன்று அவர்களில் ஒரு வீராங்கனை தனது முடிவை மாற்றிக்கொண்டு ஈரான் திரும்பத் தீர்மானித்தார்.
இதனால் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது ஆறாக உள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் கூறுகையில், “இந்த வீராங்கனைகளின் துணிச்சலான செயல் ஆஸ்திரேலியர்களை நெகிழச் செய்துள்ளது. அவர்கள் இங்கே பாதுகாப்பாக இருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு மதிப்பீடுகளுக்குப் பின்னர் விசாக்கள் வழங்கப்படுவதாகவும், விசா மறுக்கப்பட்ட சிலர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவது தமக்கு மகிழ்ச்சியே என்றும் சற்று காட்டமாகத் தெரிவித்தார்.
தேசிய கீதத்தைப் பாடாத வீராங்கனைகளை ஈரானின் அரசுத் தொலைக்காட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. “போர் காலத்தில் துரோகம் இழைப்பவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என வர்ணனையாளர்கள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “பல வீராங்கனைகள் ஈரானில் உள்ள தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் காரணமாகவே விருப்பமின்றி ஈரான் திரும்புகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள 6 பேருக்கும் 12 மாத கால மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதற்கிடையில், அணியின் ஏனைய உறுப்பினர்கள் நேற்று இரவு சிட்னியிலிருந்து ஈரான் நோக்கிப் புறப்பட்டனர்.












