இந்தியாவின் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் நேற்று கொல்லப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த குகி-ஜோ கவுன்சில், இன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.
இதையடுத்து, கடைகள் அடைக்கப்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளிலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதனிடையே 11 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக நேற்று மாலை, இம்பால் மேற்கு மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்பால் பள்ளத்தாக்கில் பல இடங்களில் மோதலில் ஈடுபடும் இரு தரப்பிலிருந்தும் ஆயுதம் ஏந்திய குழுக்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகளையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.