பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணித் தலைவர் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கையை 67/7 என்ற நிலையில் கட்டுப்படுத்தினார்.
மொஹமட் சிராஜும் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா, முக்கிய விக்கெட்டான டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.
போட்டியில் முன்னதாக நாணயச் சுழற்சியில் வென்ற ஜஸ்பிரித் பும்ரா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியால் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
ரிஷப் பண்ட் (37) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (41) ஆகியோர் மாத்திரம் இந்திய சார்பில் அதிகபடியான ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலியா சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழப்புக்கு 67 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டாகும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற, இந்தியா இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும்.