நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து ஆராய்ந்து வருவதாக வர்த்தகம், வணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடமும் இந்த வருடமும் நாட்டில் உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தற்போது உள்நாட்டில் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வாக உப்பை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உப்பு வரத்தக நிறுவனங்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
எவ்வாறெனினும், நாட்டில் உள்ள உப்பு இருப்பு மற்றும் நுகர்வுக்கு தேவையான அளவு ஆகியவற்றை ஆய்வு செய்த பின், இறக்குமதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக சுமார் 1750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 150க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.