முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேற்று (10) வழங்கிய கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) அறிவித்துள்ளதாக சட்டத்தரணி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மொத்தமாக 60 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக நாளொன்றுக்கு 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.