தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து, படகு மூலமாக சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப முயன்ற 4 இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ரோந்துக் குழுவினர், செவ்வாய்க்கிழமை இரவு, தண்ணிரோட்டு கடற்கரைப் பகுதியில் நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணப் பைகளுடன் நடந்துகொண்டதைக் கண்டறிந்து அவர்களை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சசிகுமார் (28 வயது), கோகிலவாணி (44 வயது), வேலூரில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜ்மோகன் (39 வயது), சிதம்பரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த நாகராஜ் (68 வயது) என பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அவர்களுக்கு படகு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த உள்ளூர்வாசிகளை தேடும் பணி நடந்து வருகிறது.
பொதுவாக இலங்கைப் பிரஜைகள் புகலிடம் கோரி இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாகவும், சட்டவிரோதமாக மீண்டும் நாட்டிற்குத் திரும்புவதற்கு அரிதாகவே முயற்சிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2019 இல் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடங்கியதிலிருந்து, பல இலங்கை பிரஜைகள் தனுஷ்கோடிக்கு வருகிறார்கள்.
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையர்களின் புகலிட நிலை குறித்து மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் மாநில அரசு அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளது.
தற்போது மண்டபம் முகாமில் 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.