வேளான் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்யவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்டோர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் அரியானா வழியாக டெல்லி செல்ல முயற்சித்தனர்.
அவர்களை பஞ்சாப், அரியானா இடையே உள்ள ஷம்பு எல்லையில் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, பொலிஸாருக்கும் , விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை தடியடி நடத்தியும் , கண்ணீர் புகைகுண்டு வீசியும் , தண்ணீரை பிரயோகம் மேற்கொண்டும் பொலிஸார் விரட்டியடித்தனர். இதனால், ஷம்பு எல்லையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
முன்னதாக, விவசாயிகள் கடந்த 6 மற்றும் 8ம் திகதிகளில் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தனர். அப்போது, அவர்கள் அரியானா எல்லையில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.