மொஸ்கோவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் இகோர் கிரிலோவ் (Igor Kirillov) மற்றும் அரவது உதவியாளர் உயிரிழந்த வழக்கில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 29 வயதுடைய நபரை கைது செய்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய ஆயுதப்படைகளின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், அவரது உதவியாளர் மெஸ்கோவின் ரியாசான்ஸ்கி ப்ராஸ்பெக்டில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடிக்கச் செய்யப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபரிடம் ரஷ்யாவின் விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் போது, அவர் உக்ரேனிய சிறப்பு சேவைகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
அதேநேரம், கைது செய்யப்பட்ட நபர் 1995 இல் பிறந்தவர் என்றும், தான் உஸ்பெகிஸ்தான் குடிமகன் என்று கூறினார்.
மேலும் விசாரணையில் அவர், கிரிலோவ் வாழ்ந்த குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறினார்.
இடத்தைக் கண்காணிக்க சந்தேக நபர், ஒரு காரை வாடகைக்கு எடுத்ததுடன், அங்கு அவர் உக்ரேனின் டினிப்ரோ நகரத்தில் தாக்குதல்
சூத்திரதாரிகளுக்கு வெடிப்பு சம்பவத்தை நேரலையில் ஒளிபரப்பு செய்யும் வீடியோ கமராவை நிறுவினார்,
கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் இலியா பொலிகார்போவ் கட்டிடத்தை விட்டு வெளியேறியபோது, வெடிக்கும் சாதனம் தொலைவிலிருந்து செயல்படுத்தப்பட்டது என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சந்தேக நபரின் விசாரணையின் வீடியோவை ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீசஸ் (FSB) வெளியிட்டது.
அந்த வீடியோவில், கிரிலோவைக் கொன்றதற்கு ஈடாக அவருக்கு 100,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியும் ஐரோப்பிய கடவுச்சீட்டும் வழங்கப்பட்டதாக அவர் ரஷ்ய மொழியில் செல்வதும் வெளிப்படுத்தப்பட்டது.
உக்ரேனின் அறிவுறுத்தலின் பேரில், அவர் மொஸ்கோவிற்கு வந்து குடியிருப்புக்கு அருகில் வெடிக்கும் கருவியைப் பெற்றதாக FSB மேலும் கூறியது.
எவ்வாறெனினும், சந்தேக நபரின் வாக்குமூலம் கட்டாயத்தின் பேரில் செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உக்ரேனிய பாதுகாப்பு சேவையான SBU ஏற்கனவே இந்தக் கொலையின் பின்னணியில் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.